கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே இருக்கிறது மலையரசன்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மதியழகன்(26). இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மதியழகன் விவசாய தொழில் பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வீட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.

நொச்சிமேடு பகுதியில் மதியழகன் வந்தபோது ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. மதியழகனிடம் தகராறு செய்த அவர்கள் திடீரென கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மதியழகன் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை விடாமல் துரத்திய மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி இருக்கிறது. இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அவரின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்தனர். பின் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து விட்டு மர்மக்கும்பல் தப்பி ஓடியுள்ளது.

சாலையோரத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலையானது மதியழகன் என்று தெரியவந்தது. விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் எனபவர் மதியழகனை கொலை செய்திருக்க கூடும் என காவல்துறையினர் கூறுகின்றனர். இக்கொலை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.