செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இருக்கிறது மாம்பாக்கம். இங்கிருக்கும் கொளத்தூர் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பிரேன் கூர்மி (வயது 35) என்னும் வாலிபர் காயார் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வந்த பிரேன் கூர்மி, தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார். அனைவரும் உச்ச போதையில் இருந்த போது பிரேன் கூர்மிக்கும் அவரது நண்பர் ஸ்ரீபிரோதிப் காகாளரி (45) என்பவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை மற்ற நண்பர்கள் சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பிரேன் கூர்மி, ஸ்ரீபிரோதிப் காகாளரியை தள்ளிவிட்டு அவர் மீது ஏறி அமர்ந்து பலமாக தாக்கியிருக்கிறார்.

இதில் வலிதாங்காமல் அலறிய ஸ்ரீபிரோதிப் காகாளரி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேன் கூர்மியின் கழுத்தில் சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த சரிந்து விழுந்த பிரேன் கூர்மியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொலைவழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் ஸ்ரீபிரோதிப் காகாளரியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: 'கருணாநிதி ஒரு தீவிரவாதி'..! தம்பிகளிடம் பகீர் கிளப்பிய சீமான்..!