காவல் நிலையத்தில் தொடரும் சந்தேக மரணம்: திருச்சியில் பரபரப்பு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் செல்போன் திருட முயற்சி செய்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் செல்போன் திருட முயற்சி செய்ததாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 38) என்பவரை கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தனது இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் வீட்டில் திடீர் தற்கொலை.. இது தான் காரணமா?
காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், மாலை 4 மணி வரை உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி காவல் டி.ஐ.ஜி சரவணசுந்தர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறையினரிடம் விசரணை நடத்தினர். அதன் பிறகு உயிரிழந்த முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இடுப்பில் கட்டி இருக்கும் அரைஞான் கயிற்றால் ஒரு நபர் எப்படி தூக்கு போட்டு இறக்க முடியும் என்று சந்தேகம் எழுவதாகவும் காவல் துறையினர் அடித்ததால் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி டிஐஜி சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விசாரணைக் கைதி காவல் நிலையத்தில் உயிரிழந்தது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும். மரணத்தில் காவல் துறையினருக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் உயிரிழந்த நபர் மீது கடந்த 2021ம் ஆண்டு தனது தாயை கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுமி கூட்டு பாலியல் வழக்கு! 8 பேருக்கு ஆயுள்; 12 பேருக்கு 20 ஆண்டு சிறை; கோர்ட் தீர்ப்பு