மதுரை வாடிப்பட்டியில் தாய் மாமன் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் கறி பரிமாறவில்லை என கோபப்பட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள சாணம்பட்டி குரங்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பிரபுவுக்கு பறிமாரிய சாப்பிட்டில் கறி குறைவாக வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபு, தனது தாய்மாமனான கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் சமாதனம் செய்ததைத் தொடர்ந்து பிரபு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்பு அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிரபு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவை வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு சரிந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் பிரபுவை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கார்த்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமண விழாவில் கறி பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறில் சொந்த மாமனே மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.