ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி.  இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்தார்.

சென்னை எழும்பூர் பகுதியில்  உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவரும் சுரேந்தர் என்பரும் காதலித்ததாக தெரிகிறது. சுசேந்தர் ஈரோடு மாவட்டம் ரூபின் பாக் பகுதியைச் சேர்ந்தவர். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து அங்கு வந்தார். இருவரும் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உட்கார்ந்து பேசிய அவர்கள் பின்னர் நின்று கொண்டு சத்தம் போட்டு பேசினார்கள்.. உச்சக்கட்ட மோதலில் எதிர்பாராதவிதமாக சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கையில் எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும், விடாமல் துரத்தி,  துரத்தி வேட்டினார்.

இதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்தது. உடனே சுரேந்தர் அந்த ரெயில் முன் பாய்ந்தார். ஆனால் ரெயில் என்ஜின் சற்று முன்னால் சென்றுவிட்டது. சுரேந்தர் ரெயில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் அவரும் உயிருக்கு போராடினார்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் காதல் ஜோடியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரயில்வே அதிகாரிகள் அந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு அருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்ந்ததனர். இதில் இருவரும் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.

சுரேந்தர் – தேன்மொழி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் திருமணத்துக்கு சாதி குறுக்கே நின்றது. இதனால் அவர்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், தேன்மொழிக்கு சென்னையில் கூட்டுறவுத் துறை அதிகாரியாக வேலை கிடைத்து பணிக்கு சேர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் சுரேந்தரிடம் பேசுவதற்கு தேன்மொழியின் பெற்றோர் தடை விதித்தனர். இதனால் சுரேந்தரிடம் பேசுவதை தேன்மொழி நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து தேன்மொழியை சுரேந்தர் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். அவரும் தனது நிலையை எடுத்துக்கூற சேத்துப்பட்டு ரெயில் நிலையம் வந்தார். தன்னால் பெறோரை மீறி திருமணம் செய்து கொள்ள முடியாது என தேன்மொழி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், தேன்மொழியை வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.