திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், கடந்த 2 ஆம் தேதி அதிகாலை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், கொள்ளையில் தொடர்புடைய மணிகண்டன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான முருகன் என்பவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவரின் உறவினர்கள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், திருவாரூர் பஜனை மடத்தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகரான திருமாறன் என்பவரை கைது செய்த போலீசார், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதே போல், பிரதாப் என்பவரும் விசாரணைக்காக திருச்சி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நகை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் அரங்கேறி வரும் நிலையில், முக்கிய குற்றவாளி முருகனை போலீசார் எப்போது கைது செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.