விருதுநகர் அருகே பண பிரச்சனையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்துக்கு வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார் .

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சம்பட்டியில் திருமுருகன் - அங்காளபரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர் . திருமுருகன் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் பஞ்சாலை ஒன்றில் காவலாளியாக வேலை பார்க்கும் அடைக்கலம் (36 ) என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அடைக்கலத்திற்கு அங்காளபரமேஸ்வரி மீது தீராத ஆசை இருந்து உள்ளது. இதை பயன்படுத்தி  கொண்ட அங்காளபரமேஸ்வரி அடிக்கடி அடைக்கலம் வீட்டு சென்று பணம் வாங்கி உள்ளார். இதுவரை 2  லட்சத்திற்கு மேல் வாங்கி உள்ளதாக தெரிகிறது. 

சம்பவத்தன்றும் வழக்கம் போல அங்காளபரமேஸ்வரி பணம் கேட்டு அடைக்கலத்தை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அங்காளபரமேஸ்வரியை கீழே தள்ளி கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் யாரும் இல்லாத நேரம் பார்த்து உடலை அங்காளபரமேஸ்வரியின் வீட்டிலேயே போட்டுள்ளார் அடைக்கலம். 

வேலை முடிந்து வீடு திரும்பிய திருமுருகன் மனைவியின் நிலையை  பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அங்காளபரமேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்ட தகவலை உறுதிப்படுத்தி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சந்தேக மரண பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்  அங்காளபரமேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.  அதில் அங்காளபரமேஸ்வரி அடிக்கடி அருகே இருக்கும் அடைக்கலம் வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. அடைக்கலத்தை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் சந்தேகம்  கொள்ளும்படியான பதில்களை கூறியுள்ளார். இதனால் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு தான் கொலை செய்ததை அடைக்கலம் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.