திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சித்தாலபாக்கத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முனியம்மாள் .  இவர்களுடைய மகன் வெங்கடேசன் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். வெங்கடேசனுக்கும், ஜோதிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முனியம்மாள் மகன், மருமகளுடன் வசித்து வந்தார். மருமகள் ஜோதிக்கும், மாமியார் முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாடு கட்டும் போதும் மாமியார், மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மருமகள் ஜோதியை முனியம்மாள் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஜோதி ஆத்திரத்தில் இருந்தார். நேற்று நள்ளிரவு தண்ணீரை கொதிக்க வைத்து தூங்கி கொண்டிருந்த முனியம்மாள் மீது ஊற்றினார். அதிர்ச்சியடைந்த முனியம்மாள் அலறி துடித்து எழுந்தார். வலியால் துடித்த முனியம்மாள் கத்தி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து விடுவார்கள் என பயந்த ஜோதி அருகில் கிடந்த இரும்பு ராடால் முனியம்மாள் தலையில் பலமாக தாக்கினார்.

இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் ஜோதி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கம்மராஜபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தாய் வீட்டில் பதுங்கி இருந்த ஜோதியை போலீசார் கைது செய்தனர்.