சென்னையை அடுத்த மண்ணிவாக்கத்தில் ரவுடிகள் வீடு புகுந்து குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து தாயை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மண்ணிவாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதை தடுக்க வந்த கணவன் உட்பட 2 பேரையும் வெட்டுவிட்டு தப்பினர். ஓட்டேரி அடுத்த மண்ணிவாக்கம், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மொய்தீன் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சகிராபானு (22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

 

நேற்று முன்தினம் இரவு மொய்தீன் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 4 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மொய்தீன் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த மொய்தீன், சகிரா பானுவை சரமாரியாக தாக்கி ஒரு அறையில் அடைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த பணம், நகைகள், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். 

இதையடுத்து, சகிரா பானுவை தனி அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அதில் அவர் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள், சகிராபானுவின் ஆடைகளை கிழித்து எறிந்துவிட்டு, உடல் முழுவதும் பிளேடால் கொடூரமாக கிழித்துள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற மொய்தீனை தாக்கினர்.  அவர்களது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவர் ஓடிவந்தார். அவரையும் அடித்த மர்ம நபர்கள், 2 பேரின் காலிலும் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர். 

தகவலறிந்து, ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய ரவுடிகள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே காவல் நிலைத்தில் உட்பட்ட வண்டலூர் மேம்பாலம் கீழ் கண் தெரியாத விஜயலட்சுமி என்ற பட்டதாரி பெண் கணவன் முன் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.