பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: கேரள உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ராஜினாமா!
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கேரள உயர் நீதிமன்ற மூத்த அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்துள்ளார்
வன்கொடுமை குற்றச்சாட்டில் கேரள உயர் நீதிமன்ற மூத்த அரசு வழக்கறிஞர் பி.ஜி.மனு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் மீது சோட்டானிக்கரா காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ததையடுத்து, பி.ஜி.மனு ராஜினாமா செய்துள்ளார். அவரை ராஜினாமா செய்யுமாறு அட்வகேட் ஜெனரல் அலுவலகம் கோரியதாக தெரிகிறது.
எர்ணாகுளத்தில் வசிக்கும் 25 வயது பெண் அளித்துள்ள புகாரில், 2018ஆம் ஆண்டில் தான் பதிவு செய்த பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்ய வழக்கறிஞரின் உதவியை நாடியதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த வழக்கு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் அதனை தீர்ப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் வழக்கறிஞரை அணுகியதாகவும், அப்போது, தன்னை அவரது அலுவலகத்திற்கு வரவழைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்பெண் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், இச்சமபவத்தை அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, அரசு வழக்கறிஞர் பி.ஜி.மனு அப்பெண்ணுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அப்பெண் எர்ணாகுளம் ரூரல் காவல் கண்காணிப்பாளர் சக்சேனாவிடம் புகார் அளித்துள்ளார். அவர் இந்த வழக்கை சோட்டாணிக்கரா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த வழக்கில், ஐபிசியின் பிரிவுகள் 376, 354, 506 ஆகியவற்றின் கீழும், ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளிலும் சோட்டாணிக்கரா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.