தெலுங்கானாவைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த வாரம் பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே இன்று அதிகாலையில் கற்பழித்து கொன்ற நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். பெண் மருத்துவரை எவ்வாறு கொலை செய்தனர் என்று காவல்துறைக்கு செய்து காட்டுவதற்காக நான்கு குற்றவாளிகளையும் இன்று காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவர்களை காவல்துறையினர் சுட்டு கொன்றனர்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தை கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு கிடைத்த நீதியாக பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இதற்கு எதிரான கருத்துகளும் தற்போது எழ தொடங்கியுள்ளது.  இதுதொடர்பாக கூறிய திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, 'இது போன்ற கொடூர குற்றங்களை செய்தவர்கள் மோசமாக தண்டிக்கப்பட வேண்டியது தேவை தான். ஆனாலும் இதற்கு என்கவுண்டர் தான் தீர்வா? நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறது. அதன் மூலம் கடுமையான தண்டனையை காவல்துறை பெற்று கொடுத்திருக்க வேண்டும்.

இது ஜனநாயக நாட்டில் ஏற்று கொள்ளமுடியாது. இதன் மூலம் குற்றம் செய்யாதவர்கள் பலியாகும் சூழல் நிகழ வாய்ப்புள்ளது. இதுதொடர்ந்து மக்களே நீதி வழங்குவதை ஒரு நேரத்தில் கையிலெடுத்தால் நீதிமன்றங்கள் என்னவாகும் என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும். ஆகவே அரசாங்கம் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக்கூடாது. இதே தண்டனை நீதிமன்றம் மூலமாக கிடைத்திருந்தால் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார்.