காஞ்சிபுரம் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பல் சாலையில் சென்ற பொதுமக்களை பட்டா கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனையால்தான் போதைக்கு ஆட்படும் பல மாணவர்கள் கொலை, செல்போன் திருட்டு, செயின் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி ஆண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதை மற்றும் கஞ்சா போதையில் உள்ளவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புருசோத்தமன், இன்று காலை தனது கூட்டாளிகளுடன் வந்து பொதுமக்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் தனஞ்செழியன் என்பவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் ரவுடியாக வலம் வரும் புருசோத்தமன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களும் விரைவில் பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.