803 பவுன் நகை கொள்ளை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைதான நிலையில், கொள்ளைபோன நகையில், 200 பவுன் மாயமாகி உள்ளது. மேலும் சினிமா பாணியில் தடயங்களை மறைத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 27/ம் தேதி ஒரு வாலிபர் புகுந்து, பெண் ஊழியர்கள் ரேணுகாதேவி (24), திவ்யா (22) ஆகியோரை தாக்கி, லாக்கரில் இருந்த 803 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.1.34 லட்சத்தை கொள்ளையடித்தார். இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கொள்ளை விவகாரம் தொடர்பாக நிதி நிறுவனத்தில் வேலைபார்க்கும் பெண் ஊழியர் ரேணுகாதேவி மற்றும்  அவரது கள்ளக்காதலன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம். பி.இ. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துள்ளேன். கோவைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தேன். அருகேயுள்ள செல்போன் கடையில் ரேணுகாதேவி வேலை பார்த்து வந்தார். அப்போது எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சினிமா, பார்க் என்று பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்தோம். இதன் பின்னர் ரேணுகாதேவி, அங்கிருந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பட்டதாரியான சுரேஷ் பங்கு சந்தையில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. வட்டி கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாமலும் திணறினார்.

இதனையடுத்து ரேணுகாவிடம் நீ வேலை பார்க்கும் நிறுவனத்தில் கொள்ளையடிக்கலாம், யாருக்கும் தெரியாமல் நாள் பார்த்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் இத்திட்டத்திற்கு ரேணுகா ஒப்புக்கொண்டார். சம்பவத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு , நிதிநிறுவனத்தின் அருகிலுள்ள பேக்கரிக்கு சென்று அமர்ந்தேன். அப்போது நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தபடி ரேணுகாதேவி, நிதி நிறுவனத்தின் பீரோ, லாக்கர் சாவி கொத்துடன் அங்கு வந்தார். எந்த சாவி, எந்த லாக்கரை திறக்கும் என விளக்கமாக கூறினார். சம்பவத்தன்று மாலை 3.30 மணிக்கு முகத்தில் கர்சிப் கட்டியபடி நிதி நிறுவனத்திற்கு சென்றேன். முன்புறம் திவ்யா என்ற ஊழியர் இருந்தார். அவர் என்னை பார்த்ததும் நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது அவரது முகத்தில் ஓங்கி குத்தினேன். 

இதில் அவர் மயங்கி சரிந்தார். ரேணுகாதேவி, பாத்ரூமில் மறைந்து நின்று பணம், நகை இருக்கும் அறையை சைகை செய்து காண்பித்தார். இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஆட்டோ பிடித்து போத்தனூர் ரயில்நிலையம் சென்றேன். பின்னர் பேருந்தில் ஏறி சத்தியமங்கலம் சென்றேன். எனது வீட்டின் மாடியில் தந்தை நடத்திவரும் தங்கப்பட்டறையில் பெற்றோர் தூங்கியபின், நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நகைகளை எல்லாம் உருக்கினேன். தங்க கட்டிகளை அங்குள்ள ஒரு அறையில் மறைத்து வைத்துவிட்டு, மறுநாள் மாலை 3 மணி அளவில் கோவை வந்தேன். 

இதற்கிடையில் பீளமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேணுகாதேவியை சந்தித்து நலம் விசாரித்து செலவுக்கு கொடுத்துவிட்டு, நகைகளை உருக்கி விட்டேன். போலீசாருக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதை விற்றால் ரூ.1.50 கோடி கிடைக்கும். ரூ.1 கோடியை நான் எடுத்துக்கொள்கிறேன். உனக்கு 50 லட்சம் தருகிறேன் என்று கூறினார். இதன் பின்னர் போலீசார் எப்படியோ என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் 200 நகைகள் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.