கடந்த 1998 ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பிப்ரவரி 14 ம் தேதி நடந்த இந்த கொடூர தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கோவையைச் சேர்ந்த பாஷா, அன்வர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது. அவர்களுக்கு ஆயுள்தண்டனையும் மற்றவர்களுக்கு 10 ஆண்டு, 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர். சிலர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் விடுதலை ஆயினர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். கோவை உக்கடத்தை சேர்ந்த சாதிக் என்கிற ராஜா என்கிற டெய்லர் ராஜா என்கிற வளர்ந்த ராஜா (வயது 43), முஜிபுர் ரகுமான் என்கிற முஜி (50), ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பலவருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் தற்போது கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா 2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை , மதுரை, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கும் வாய்ப்பும் அதிகம் இருப்பதால் விமான நிலையங்களுக்கும் அவர்களின் புகைப்படம், விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இந்தியா திரும்பி வரும்போது பிடிப்பதற்கு உஷார் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தங்கள் தெரிவிக்கின்றனர்.