கொலையான தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரின் சித்தப்பா கேசில், சந்தேகத்திற்குரிய 6 பேரை பிடித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கிராமம் மருத விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் தென்காசி மக்களவை தொகுதி திமுக எம்.பி. தனுஷ்குமாரின் சித்தப்பா நேற்று இரவு அங்குள்ள பிரம்மகுளம் பகுதியில் உள்ள தனது வயலுக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் பிரம்மகுளம் கண்மாய் பகுதியில் கருப்பையா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார்  சந்தேகத்திற்குரிய 6 பேரை பிடித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.  
 
கொலையான கருப்பையா ரேசன் கடை ஊழியராகவும். ஊர் சமுதாயத் தலைவராகவும் இருந்தார்.  ரேசன் கடை எடையாளர்கள் சங்கத்துக்கும் அவர்தான் தலைவர். அந்தப் பகுதியில் கடந்த மாதம் நடந்த கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் தகராறு செய்தனர். அவர்கள் அடித்து விரட்டப்பட்டதற்கு காரணமாக இருந்தவர் கருப்பையா தான். அதனால் ஏற்பட்ட முன் பகையா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். 

அதுமட்டுமல்ல, கருப்பையா, பெண்கள் விஷயத்திலும் அப்படி இப்படியென சொல்லப்படுவதால். பெண் தொடர்பால், பாதிக்கப்பட்ட யாரும் கூலிப்படையை ஏவி கருப்பையாவைக் கொலை செய்திருப்பார்களோ? என்ற சந்தேகமும் விசாரணை வளையத்தில் சிலரை சிக்க வைத்திருக்கிறது.