தந்தையை கொன்றவரை 22 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த இளைஞர்!
தந்தையை கொன்ற நீண்ட குற்றப் பின்னணி கொண்டவரை 22 ஆண்டுகள் கழித்து இளைஞர் ஒருவர் பழி தீர்த்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது
சென்னை மாதவரத்தில் நீண்ட குற்றப்பின்னணி கொண்ட இரட்டைக் கொலையாளியும், தற்போது சீர்த்திருத்த வாழ்க்கை வாழ்ந்து வந்தவருமான செழியன் (52) என்பவரை சதீஷ் குமார் என்ற இளைஞர் கொலை செய்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சதீஷ் குமாரின் ஏழு வயதில் அவரது தந்தை பிரபாகரனை 2001ஆம் ஆண்டு கொடுங்கையூர் பகுதியில் செழியன் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த செழியன், பிரபாகரனின் சகோதரரையும் கொலை செய்துள்ளார்.
இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு செழியனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், 2018ஆம் ஆண்டில் விடுதலையான அவர், சீர்திருத்த வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும், வெல்டிங் கடையில் பணியாற்றி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், தண்ணீர் கேன் சப்ளையராக பணியாற்றி வந்த சதீஷ்குமார், தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் கொலைகளுக்கு பழிவாங்க முடிவு செய்தார். இதையடுத்து, மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து செழியனை வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த செழியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் விஷால், அப்பு, மகேஷ் ஆகியோர் போலீசில் சரணடைந்தனர்.