காதல் கணவனுடன் சேர்ந்து, 4 வயது குழந்தையை, தாய் கொன்று புதைத்தார். இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (25). இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் ஆனது. 4 வயதில் தருண் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா, கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் சென்றுவிட்டார். பின்னர், 2017ம் ஆண்டு காவ்யா, ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தார். அப்போது ராணிப்பேட்டை நகராட்சி குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 

இதைதொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். குழந்தையுடன் காவ்யா,  காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த வேளையில் குழந்தை தருண், அவர்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்தனர். இதனால், குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய முடிவு செய்தனர். இதையொட்டி, கடந்த 10ம் தேதி வீட்டை காலி செய்து விட்டு, வாலாஜா பெல்லியப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர்.

13-ந் தேதி மாலை வீட்டில் விளையாடி கொண்டிருந்த தருணை காவ்யா, தியாகராஜன் இருவரும் தூக்கி வந்தனர். வீட்டுக்குள் எவர் சில்வர் அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு, குழந்தை துடிதுடித்து இறந்தது. இதையடுத்து, குழந்தை சடலத்தை அரிசி மூட்டையில் கட்டி, அன்று இரவு தியாகராஜன் பைக்கில் கொண்டு சென்று ஆற்காடு டெல்லிகேட் அருகே பாலாற்றுக்கு சென்றார். அங்கு பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்துவிட்டு, வீடு திரும்பினார். பின்னர் இருவரும் எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் காவ்யாவின் தாய் நேற்று, அவர்களது வீட்டுக்கு சென்றார். அப்போது, குழந்தை தருண் பற்றி காவ்யாவிடம் கேட்டபோது, அவர் மழுப்பலாக பதில் கூறினார். ஆனாலும் அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் குழந்தையை கொன்று புதைத்தது பற்றி கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், கிராம நிர்வாக அலுவலர் அதியமானிடம், மகள் காவ்யாவை பிடித்து கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் காவ்யாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், இச்சம்பவம் பற்றி அறிந்ததும் தியாகராஜன் தலைமறைவாகி விட்டார். போலீசார் , அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதைக்கப்பட்ட குழந்தை சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் ஆற்காட்டில் கணவர், குழந்தையை இளம்பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்தார். அதேபோல் மீண்டும் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.