கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன், உடலை வீட்டிற்குள் கட்டிலுக்கு அடியில் புதைத்துள்ளார். மனைவி காணாமல் போனதாக சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை அடுத்து அவரை கொடூரமாக கொலை செய்து உடலை வீட்டிற்குள் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6ம் தேதி அந்த பெண் திடீரென காணாமல் போயுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அக்டோபர் 13ம் தேதி காவல் நிலையத்தில் தனது சகோதிரியை காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை குற்றவாளியின் கட்டிலுக்கு அடியில் புதிதாக ஒரு குழி தோண்டப்பட்டிருப்பதை பெண்ணின் சகோதரர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையில் தோண்டிப் பார்த்தபோது, பூலம் தேவியின் அழுகிய உடலைக் கண்டெடுத்தனர். உடல் ஆறு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், காவல்துறை வருவதற்குள் குற்றவாளி வீட்டிலிருந்து தப்பி ஓடு தலைமறைவானார். பின்னர் காவல்துறையினர் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர். அவர் ஹரியானாவில் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். விடுமுறைக்கு ஊர் திரும்பியபோது, உள்ளூரைச் சேர்ந்த குட்டு என்பவருடன் மனைவிக்கு தொடர்பு இருந்ததை அறிந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் குற்றவாளி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.