சிவகங்கை அருகே தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண், கணவர் வேலைக்கு சென்றதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மச்சக்காளை. விவசாயம் செய்து வருகிறார். இவருடைய 2-வது மகள் ரூபிகா (21). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே உள்ள ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
புதுமண தம்பதியான பாண்டி, ரூபிகாவுக்கு தலை தீபாவளி என்பதால் கொண்டாட கடந்த 19-ம் தேதி மாமனார் வீட்டுக்கு வந்தனர். குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பாண்டி நேற்று ரூபிகாவிடம் வேலைக்கு செல்லப்போவதாக கூறியுள்ளார். அதற்கு ரூபிகா தலை தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? இன்னும் 2 நாள் இங்கேயே இருந்து விட்டு போகலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேலைக்கு நேரமாகிறது என்று கூறிவிட்டு ரூபிகா பேச்சை கேட்காமல் வேலைக்கு சென்றுள்ளார்.தான் சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் மனவருத்தம் மற்றும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக புழுதிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரூபிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 3 மாதத்தில் உயிரிழந்ததை அடுத்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோபத்தால் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
