வாகனங்களில் கட்சிக்கொடிகளை கட்ட தடை விதித்தாலே 50 சதவிகித குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

உலகிலேயே வாகனங்களில் கட்சிக் கொடியை கட்டிக் கொண்டு போவதை தமிழகத்தில் தான் அதிகமானோர் கடைபிடித்து வருகின்றனர். அதேபோல் கட்சிக்கரை வேட்டி, ஆடைகளில் கட்சி அடையாளங்கள், பேனாவில் தலைவர்கள் படம், அணியும் ஆபரணங்களில் கட்சி சிம்பள் என தத்தம் கட்சியினர் அணிந்து கொண்டு அலப்பறையைக் கூட்டுவதில் உலகில் தமிழர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. 

கட்சி நிர்வாகிகள் செல்லும் இன்னோவா, சுமோ கார்களில் கட்சிக்கொடி கட்டிச் செல்வதைக் கூட சகித்துக் கொள்ளலாம். சைக்கிள், ஸ்கூட்டர், பைக், மாருதி 800 வரையிலான வாகனங்களில் தங்களது கட்சி அடையாளங்களை பளிச்சென படம்போட்டு, கட்சி கொடியை வரைந்து ஆளாளுக்கு அரசியல் ஆர்வத்தை காட்டும் அடாவடிக்கு பெயர்போனது தமிழகம். கட்சி சின்னத்தை வரைந்து கொண்டு சாலை விதிகளை மீறி செல்லும்போது, ‘’நான் எந்தக் கட்சினு தெரிஞ்சும் என் வாகனத்தை நிறுத்துறீங்க... உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?’’ என போலீசாரை மிரட்டுவதும், கட்சிக் கொடிகளை கட்டிக் கொண்டு டோல்கேட்களில் மிரட்டுவதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

டோல்கேட், போலீஸாருக்கே இந்த நிலை என்றால் கட்சிக்கொடிகளை கட்டிக் கொண்டு பொதுமக்களிடம் இவர்கள் செய்யும் அடவாடிகளை கேட்டால் அடிவயிறு கலங்கும். உண்மையில் கட்சிப் பதவிகளில் கூட அவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் கொடியை கட்டிக் கொண்டு மேயர் பதவியில் இருப்பதை போல மேதாவித் தனம் காட்டுவார்கள். 

இந்த நிலையில் தான் இன்று விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டத் தடை விதித்தாலே 50 சதவிகித குற்றச் செயல்கள் குறைந்து விடும் என அறிவிறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை.