கோத்தகிரியில் நான்கரை வயது பெண் குழந்தையை தாயே மதுபோதையில் குடிநீர் தொட்டியில் வீசி கொலை செய்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்களது மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4). பிரபாகரன் கடந்த 1 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். 

எனவே சஜிதா பிரபாகரன் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான கோத்தகிரியில் உள்ள பங்களாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் சஜிதாவின் நான்கரை வயது மகள் ஸ்ரீஹர்ஷினி திடீரென காணாமல் போனார். உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பங்களாவை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் ஸ்ரீஹர்ஷினி சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சஜிதாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் சஜிதா தனது குழந்தையை தானே கிணற்றில் வீசி கொன்றதாக கூறியுள்ளார்.

 

அவர் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு மது பழக்கம் இருந்ததால் நான் காட்டேஜில் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. அதேபோல் பலருடன் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, மகளை கொல்ல முடிவு செய்தேன். இரவு மது போதையில் இருந்த நான், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை குடிநீர் தொட்டியில் போட்டு கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.