திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கைது - கமிஷன் தராததால் ஆத்திரம்!
கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி திமுக பெண் கவுன்சிலர் வெட்டப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை அருகே மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2 ஆவது வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி சித்ரா. திமுகவை சேர்ந்த சித்ரா, மலுமிச்சம்பட்டி ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், சித்ரா, அவருடைய கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இரவு 9.30 மணியளவில் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் திபுதிபுவென்று புகுந்தனர். அவர்களை பார்த்ததும் சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டு யார் நீங்கள்? எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள்? என கேட்டு உள்ளனர்.
ஆனால், அதற்குள் ஆவேசமாக வந்த கும்பல் அரிவாளால் கவுன்சிலர் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோரை சரமாரியாக வெட்டியது. அதை தடுப்பதற்காக ஓடி வந்த அவர்களது மகன் மோகனையும் அக்கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் 3 பேரும் கூச்சல் போட்டனர். அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இதையடுத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய கவுன்சிலர் சித்ரா, ரவிக்குமார், மோகன் ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். அதை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்து உள்ளார். இதற்காக ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த கமிஷன் தொகையை சித்ரா கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்து உள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜா, தனக்கு தெரிந்த 4 பேருடன் முகமூடி அணிந்து சென்று சித்ரா உள்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராஜாவை தேடி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துப்பாண்டி (24), முகேஷ்கண்ணன் (22), பிச்சை பாண்டி (23), ஶ்ரீரக்சித் (18) ஆகியோருடன் சென்று பெண் கவுன்சிலரை ராஜா அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.