நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இருக்கிறது சீலாத்திக்குளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து. ஆடு மேய்க்கும் தொழில் பார்த்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன்(21). வள்ளியூரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார்.

வேல்முருகன் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக வேல்முருகன் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது நண்பர்கள் தொலைபேசியில் அவருடன் பேச முயற்சித்துள்ளனர். ஆனால் வேல்முருகனை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதையடுத்து நண்பர்கள் சிலர் வேல்முருகனின் வீட்டில் சென்று அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது வேல்முருகன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அவரை அழைத்தும் எந்த சத்தமும் வராததால் சந்தேகம் கொண்ட நண்பர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வேல்முருகன் தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

வேல்முருகனின் உடலை மீட்ட காவல்துறையினர்,பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் குடிபோதையில் வேல்முருகனை அவரது தந்தை முத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்து மீது கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!