நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே இருக்கும் அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி பாக்யா. இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராஜ் என்கிற மகனும், கவியரசி என்கிற மகளும் இருந்துள்ளனர்.  அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஸ்ரீராஜ் 3ம் வகுப்பும், கவியரசி 1ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்தநிலையில் பாக்யாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் தனது தாய் வீட்டில் சென்று கடந்த சிலநாட்களாக ஓய்வெடுத்து வந்துள்ளார். வெகுநாட்களாகியும் குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

பாக்யா உடல்நலம் சரியில்லாமல் போனதிற்கு சீரஞ்சீவி தான் காரணம் என்று அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தகராறு ஏற்படவே குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு சீரஞ்சீவி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அதன்பிறகும் பாக்யா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சீரஞ்சீவி இரண்டு நாட்களுக்கு முன்பாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு செம்மேடு சீக்குப்பாறையில் இருக்கும் வியூ பாய்ண்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு 150 அடி ஆழ மலைப்பள்ளத்தாக்கில் குழந்தைகளை தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் காவலர்கள், சீரஞ்சீவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தைகளை தந்தையே பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.