சென்னை அமைந்தக்கரையில் ரூ.36 ஆயிரம் கள்ளநோட்டு வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மருந்தகத்தில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற போது வனிதா என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் அதிமுக வட்டச்செயலாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த வனிதா, அண்ணாசாலை ஒரு கடையில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அமைந்தகரையில் ரயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள சோனியா மருத்துக்கடைக்கு சென்று 2000 ரூபாயை கொடுத்து, 300 ரூபாய்க்கு மருத்து வாங்கிவிட்டு மீதம் 1700 பெற்றுக்கொண்டு சென்றார். 

கடைக்காரர்களுக்கு திடீரென அந்த ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்தனர். பிறகு வனிதாவை அழைத்தனர். ஆனால் நிற்காமல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அவரை பின் தொடர்ந்து வந்த போது மற்றொரு மருத்துக்கடைக்கு வனிதா சென்று அங்கும் 2000 ரூபாயை மாற்ற முயன்ற போது  கையும் களவுமாக பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து ஒப்படைத்துள்ளனர். 

வனிதாவிடம் இருந்து ரூ.36 ஆயிரம் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது உடன் பணியாற்றியவர் மூலமாக பழக்கமான கொளத்துரைச் சேர்ந்த வழக்கறிஞரும் வட்டச்செயலாளருமான காமேஷ் என்பவர் கள்ளநோட்டுகளை தம்மிடம் கொடுத்ததாக வனிதா கூறியுள்ளார். இதன் பேரில் காமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.