காஞ்சிபுரம் அருகே பட்டப்பகலில் அலுவலகத்தில் வைத்து திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்ரைப ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). பிள்ளைப்பாக்கம் ஊராட்சி திமுக செயலாளர். ரியல் எஸ்டேட், தனியார் கம்பெனிகளில் ஸ்கிராப் எடுக்கும் தொழில் மற்றும் கட்டுமானம், கட்டுமான பொருட்கள் சப்ளை செய்தல் ஆகிய தொழில்கள் செய்து வந்தார். இவரது மனைவி மாரி. முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். 

 

இந்நிலையில்  திமுக சார்பில் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில்,  ரமேஷ் தலைமையில் நேற்று காலை ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் மதியம் நடந்த ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். கூட்டம் முடிந்தவுடன் அங்கேயே சாப்பிட்டு முடித்து, ரமேஷ் காரில் புறப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அலுவலகத்துக்கு சென்றார். 

அப்போது திடீரென அலுவலகத்தில் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அங்கிருந்த ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. பின்னர் பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். 

இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொழில் போட்டியின் காரணமாக நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.