சென்னையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரும், தேமுதிக பிரமுகருமான பாண்டியன் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாடி முல்லைநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் தே.மு.தி.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது மகனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். பாடி குமரன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் தனது புல்லட்டில் பாண்டியன் சென்று கொண்டிருந்தார். 

அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன் அவர்களிடம் தப்ப முயன்றார். ஆனால் அவரை ஓட ஓட விரட்டி அந்த கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்போட்டியா அல்லது அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

தேர்தல் நேரத்தில் தேமுதிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கொலை நடைபெற்றுள்ளது.