கேரளாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்தால் தந்தையை அவரது ஒரே மகள் காதலனுடன் சேர்ந்த கொடூரமாக கொன்ற படு பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள இலவம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சஜீவ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ஒரே மகள் என்பதால் அவர் மீது சஜீவ் அளவுக்கு அதிக பாசம் வைத்திருந்தார். மகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவரை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மகளுக்கும், கோட்டயம் பள்ளிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவருடன் காதல் உருவானது. அந்த பெண் கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது ஏற்பட்ட இந்த நட்பு, காதலாக மாறியது. பெற்றோருக்கு தெரியாமல் அவர் தனது காதலனுடன் பழகிவந்தார்.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் அவரது அம்மாவுக்கு தெரியவந்தது. அவர் மகளை கண்டித்த போதும் அவர் காதலை கைவிடவில்லை. இதனால் அவர் வெளிநாட்டில் உள்ள தனது கணவர் சஜீவிடம் அது பற்றி சொல்லி அழுதுள்ளார்.

இதனால் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய சஜீவ், மகளிடம் காதலை கைவிடும் படி கூறினார். தந்தையின் பாசத்தைவிட காதலனே பெரிதாக தெரிந்ததால் தந்தையின் பேச்சை ஏற்க மறுத்த மகள் வீட்டில் இருந்த நகையை எடுத்துக் கொண்டு காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சஜீவ் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அவரது மகளையும், காதலனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு சஜீவும் சென்றார். அவர் மகளை தன்னுடன் வரும்படி கூறி பாசப்போராட்டம் நடத்தினார். ஆனால் தான் பஸ் டிரைவரை கல்யாணம் செய்து கொண்டதாகவும், தாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் அந்த பெண் கூறியதால் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

பாசமாக வளர்த்த மகளை காதல் வலையில் வீழ்த்தி தன்னிடம் இருந்து பிரித்துச் சென்ற மகளின் காதலன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சஜீவ் அவரை அடிக்கடி சந்தித்து தகராறில் ஈடுபட்டு வந்தார். அவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவரது காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சஜீவின் மகள், அவரது காதலன் மற்றும் நண்பர் ஒருவர் ஆகிய 3 பேரும் சஜீவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சஜீவை 3 பேர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். ரத்த வெள்ளத்தில் சஜீவ் துடித்துக்கொண்டே கீழே சாய்ந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் சஜீவை காப்பாற்றி பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஜீவ் இறந்துவிட்டார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து சஜீவின் மகள், காதலன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை அவரது ஒரே மகள் காதலனுடன் சேர்ந்த தீர்த்துகட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.