பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் மீது புகார் அளித்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்..

 

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்ஃபோன்களில் நான்கு வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அந்த போனில் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாவது தவறானது. அந்த 4 வீடியோக்களில் நான்கு பெண்கள் உள்ளனர்.

இந்த பிரச்சனையில் அரசியல்வாதிகள் யாருக்கும் தொடர்பில்லை என தெரிவித்த எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டார். இதற்கு கடும் எண்டனம் எழுந்துள்ளது. மேலும் எஸ்.பி.குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில் கோவை எஸ்.பி.பாண்டியராஜன் யார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன் கோவில் செல்லும் வழியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை தொடங்கியது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது.

இதனால், போராட்டக்காரர்கள் மீது மாலையில் போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது ஈஸ்வரி என்ற 45 வயது பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஓங்கி அறைந்தார். அடி தாங்க முடியாத அந்த பெண் நிலைகுலைந்தார். மேலும் அவர் கேட்கும் திறனையும் இழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அப்போது கன்னத்தில் அறைந்த திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தான் தற்போது பதவி உயர்வு பெற்று கோவை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுளளார்.

பெண் என்றும் பாராமல் ஒருவரை கன்னத்தில் அறைந்து நிலைகுலையச் செய்த ஒரு போலீஸ் அதிகாரியிடம், பெண்கள் பாலியல் பிரச்சனை குறித்த வழக்கை கொடுத்தால் அவர் எப்படி முறையாக விசாரிப்பார் என பெண்கள் அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.