கோவையில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொலை தொடர்பாக 6 நாட்களுக்கு பிறகு சநதோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சந்தோஷ்குமாரை விசாரித்ததில் சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூரை சேர்ந்தவர் பிரதீப் (30). லாரி டிரைவர். இவரது மனைவி வனிதா (26). இவர்களது 6 வயது மகள் ரித்னாஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். 6 நாட்களுக்கு முன்னர் வீட்டின் முன் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். 

இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனிடையே இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் போலீசார் தொய்வு அடைந்தனர். 

இந்நிலையில் 6 நாட்களுக்கு பிறகு இந்த கொலை தொடர்புடைய தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷ்குமாரை விசாரித்ததில் சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.