துடியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு சரியான நீதி கிடைக்காவிட்டால் வரும் தேர்தலில் நாங்கள் யாரும் வரும் தேர்தல்களில் வாக்களிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கடுமையாக எச்சரித்தபின்  ஆறுநாட்கள் விசாரித்து இன்று காலை சந்தோஷ்குமார்(34) என்ற நபரை கைது செய்துள்ளார்கள்.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாதம் 25-ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில்,  26-ம் தேதி காலையில் சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் மக்கள் துடியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களை விரட்டி அடித்ததோடு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சரியான நீதி கிடைக்காவிட்டால் வரும் தேர்தல்களில் எங்கள் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் கொதித்தனர்.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னரே சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். பாரத்சேனா‌ என்னும் அமைப்பைச் சேர்ந்த தேசபக்தர் என்று கூறப்படுகிறது. மே 17 இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் விசாரணை, துப்பு வேட்டை நடத்தி இவன்தான் குற்றவாளி என மூன்று நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் என்ன காரணத்தாலோ போலீஸார் குற்றவாளியின் பெயரை வெளியிடாமல் பாதுகாத்து வைத்திருந்துள்ளனர்.