சென்னையில் பிரபல ரவுடி ரஞ்சித் (25) தலையில் கல்லைப்போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைநகர் என்று அழைக்கப்படும் சென்னை கடந்த சில நாட்களாக கொலை நகரமாகவே மாறி வருகிறது. தொழில்போட்டி, முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற காரணங்களுக்காக கொலைகள் அரங்கேறி வருகிறது. இதனால், சென்னை மக்கள் எப்போதும் பீதியிலே இருந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், சென்னை நெற்குன்றம் ஏ.வி.கே. நகரில் பிரபல ரவுடி ரஞ்சித் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாட்டில் மற்றும் கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலை செய்யப்பட்ட ரஞ்சித் திருவேற்காட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது. இவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா? அல்லது குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  

கடந்த வருடம் மார்ச் மாதம் ரோந்து பணியில் இருந்த காவலர் அன்பழகனை தாக்கிய வழக்கில் கொலை செய்யப்பட்ட ரஞ்சித் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.