சென்னையை உலுக்கிய தம்பதி படுகொலை..ஓட்டுநரே கொலை செய்த பயங்கரம்..போலீஸ் எடுத்த அதிரடி ஆக்சன்!
பத்து வருடங்களாக பணிபுரிந்து வந்த கார் ஓட்டுநரே தம்பதி ஒருவரை படுகொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).கடந்த மாதம் மார்ச் இவர்கள் இருவரும் அமெரிக்காவிலுள்ள மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காகச் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இவர்களை அழைத்து வந்து வீட்டில் இறக்கியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவில் இருந்து அவரது மகள் சுனந்தா, தனது பெற்றோரைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அப்போது தனது தாய், தந்தை இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிருந்ததால், சந்தேகம் அடைந்த சுனந்தா, இந்திரா நகரை சேர்ந்த தனது உறவினரான திவ்யாவை தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டிற்கு மதியம் 12.30 மணி அளவில் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் இல்லாத காரணத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் போலீசார் ஓட்டுநரை பிடித்தனர். சரியாக மாலை 6.30 மணியளவில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும், ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் வைத்து அவர் ஓட்டி சென்ற காருடன் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஓட்டுனர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிச்சேரி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.
மேலும், வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. கொலையாளி கிருஷ்ணா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சடலங்களும் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த கிருஷ்ணா அவர்களை கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.