சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் காதலன் மூலம் கணவன் மீது தாக்குதல் நடத்திய மனைவி அனிதா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கதிரவனுக்கும், அனிதா என்பவருக்கும் 13 நாட்கள் முன்னர் தான் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் இன்று அதிகாலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். புதுமண தம்பதி மிகவும் குதூகலமாக கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டனர். நகைகளை தரமறுத்து கதிரவன் அவர்களுடன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கி தம்பதியிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். 

இந்த தாக்குதலில் கதிரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குபப்திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்தும் மற்றும் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

காதலன் மூலம் கணவன் மீது தாக்குதல் நடத்தியது மனைவி அனிதா தான் என்று தெரிவந்தது. இதனையடுத்து மனைவி அனிதா மற்றும் ஆண்டனி ஜெகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் நடந்த 13 நாட்களில் காதலன் மூலம் கணவனை மனைவி தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.