கோயம்பேட்டில் கத்தியை காட்டி செல்போன் பறித்த இருவர் கைது
சென்னை கோயம்பேடு மற்றும் அமைந்தகரை பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம், 1 கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை 04.30 மணியளவில் மேத்தா நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பூமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து பூமணி அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகிய 2 நபர்களை கைது செய்து தீவிர விசாரித்தனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது
முதற்கட்ட விசாரணையில் இருவரும் பூமணியிடம் இருந்து செல்போன் பறித்துக் கொண்டு உடனேயே அடுத்த இடமான கோயம்பேடு பகுதியிலும் மற்றொரு நபரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அசோக்குமார் மீது ஏற்கனவே புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கும். ஆனந்த் மீது 5 திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்