பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல, திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அதன் அடிப்படையில் பலருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பி வருகின்றனர். 

ஏற்கனவே, நக்கீரன் கோபால், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி ஆஜராகும் படி, பார் நாகராஜன், திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில், 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.  புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட  செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கின்றனர்.

முன்னதாக, கட்சி தலைவர்களுடன் மட்டுமே தனக்கு பழக்கம் உள்ளதாக கூறிய அவர், அரசியலில் இருப்பதால் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உள்ளிட்டோர் தன்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டதாக விளக்கமளித்த பார் நாகராஜ், எல்லோருமே தன்னை தவறாகவே சித்தரிப்பதாகவும்,  இதனால் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் மானப்பிரச்சனை ஏற்பட்டுள்ளராகவும்  வீடியோ வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, அந்த செக்ஸ் வீடியோவில் இருப்பது  சதீஷ் என்ற  நண்பர் தான் என்றும் இதனை நிரூபிக்க, தான் தயார் என்றும் அவர்  கூறியிருந்தார்.