துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் ஷோகீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் ஷோகீன். இவர் தனது மருமகளை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனோஜ் நாங்லோய் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், டிசம்பர் 31, 2018 அன்று, தனது கணவர், சகோதரர் மற்றும் ஒரு உறவினருடன் தனது தாய் வீட்டை விட்டு மீரா பாக் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால், என் கணவர் எங்களை அவரது  வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, பாசிம் விஹார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

நாங்கள் ஓட்டலை அடைந்தபோது, புத்தாண்டு கொண்டாட என் உறவினர்கள் சிலர் ஏற்கனவே அங்கே இருந்தார்கள். விருந்துக்குப் பிறகு, ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் மீரா பாக் நகரில் உள்ள எனது மாமியார் வீட்டிற்குச் சென்றோம். நான் தூங்கச் சென்றபோது என் கணவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று விட்டார்.

அதிகாலை 1.30 மணியளவில் எனது மாமனார் அவருடன் பேச விரும்புவதால் கதவைத் திறக்கும்படி கூறினார். கதவை திறந்தவுடன் அவர் அறைக்குள் நுழைந்தார். அவர் என்னை தகாத முறையில் தொட ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து அவர் குடிபோதையில் இருந்ததால் தூங்கச் செல்லும்படி கேட்டேன். இருப்பினும், அவர் துப்பாக்கியை எடுத்து மிரட்டினார். என்னை கன்னத்தில் அறைந்தார். நான் சத்தம், எழுப்ப முயன்றபோது என் சகோதரனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆரம்பத்தில் திருமணத்தையும் என் சகோதரனையும் காப்பாற்றுவதற்காக, அவர் மீது புகார் அளிக்கவில்லை.

சாகேத் நீதிமன்றத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றநீதிமன்றத்தில் எனது மாமனார் மீது ஏற்கனவே வன்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டிசம்பர் 2018-ல் திருமணம் செய்து கொண்ட உடனேயே என்னை தாக்கினார்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மனோஜ் ஷோகீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.