திண்டுக்கல்லில் வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வெள்ளைப் பூண்டு வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் 5க்கும் மேற்பட்டோர் பட்டப் பகலில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சின்ன தம்பியை அரிவாள் உள்ளிட்ட பலத்த ஆயுதங்களால்ல் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் சின்ன தம்பி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சின்ன தம்பியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.