டாக்சியில் செல்லும்போது உண்மையை கொட்டிய பெண், ரூ.22 லட்சத்தை ஆட்டையை போட்ட டாக்சி டிரைவர்; உஷார் மக்களே!!
பொது இடங்களில் இருக்கும்போது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெங்களூரு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
பெங்களூருவில் கிரண் குமார் என்ற உபர் டாக்ஸி டிரைவர் பயணியிடம் ரூ.22 லட்சம் ரொக்கம் மற்றும் 960 கிராம் தங்கத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை இழந்த பெண் கடந்த வருடம் அவரது டாக்ஸியில் பயணித்தபோது, அவரது தனிப்பட்ட விபரங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் நவம்பர் 2022 இல் கிரண் குமாரின் டாக்சியில் இந்திராநகரில் இருந்து பானஸ்வாடிக்கு சவாரி செய்துள்ளார். பயணத்தின் போது, தமது செல்போனில் பேசியபடி வந்த அவர், போனில் பேசிய நண்பருடன் தனது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதை ஒட்டுக்கேட்ட டாக்சி டிரைவர் கிரண் குமார் அந்தத் தகவல்களை மோசடிக்கு பயன்படுத்தி இருக்கிறார்.
அந்தப் பெண் கூறிய தகவலைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் சிறுவயது நண்பர் ஒருவரைப் போல் நடிக்க முடிவு செய்திருக்கிறார் கிரண். போனில் பேசியபோது அந்தப் பெண் கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்வதாகக் கூறியுள்ளார். அவரை நம்பி அந்தப் பெண் அவரது கணக்கிற்கு ரூ.22 லட்சம் பணத்தை அனுப்பியிருக்கிறார்.
கிரண் குமார் அதோடு நிற்கவில்லை. அந்தப் பெண்ணிடம் அதற்கு மேல் பணம் இல்லை என்ற நிலையிலும், அவரது நகைகளையும் பெற்றுள்ளார். அவரை நம்பி அந்தப் பெண்ணும் தன்னிடம் இருந்த 960 கிராம் தங்கத்தை ஒப்படைத்திருக்கிறார். பின்புதான், நண்பர் என்று கூறிக்கொண்டு தன்னை ஏமாற்றியது டாக்ஸி டிரைவர் கிரண் குமார் என்பதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கிரண் குமார் தனது மோசடி அம்பலமானதும் அந்தப் பெண்ணின் அந்தரங்கத் தகவல்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிந்து புகார் கொடுத்திருப்பதாகவும் பெங்களூரு கிழக்குப் பிரிவு காவல் துணை ஆணையர் பீமாசங்கர் குலேத் கூறுகிறார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கிரண் குமாரை கைது செய்து, அடகு வைக்கப்பட்ட திருட்டு நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை முன்னிட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள காவல்துறை, பொது இடங்களில் இருக்கும்போது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பொது இடங்களில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது நல்லது. கார், ஆட்டோவில் சவாரி செய்யும்போதும், ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போதும் போனில் பேசிக்கொண்டிருந்தால், சுற்றிலும் இருப்பவர்கள் நம் பேச்சை ஒட்டுக்கேட்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், இந்தப் பெண்ணைப் போல் பணத்தையும் பொருட்களையும் இழக்க நேரிடும்.