ராமேஸ்வரம், பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் கள்ளக்காதலனுடன் குதிக்க மறுத்த கள்ளக்காதலி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

மதுரை, முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் 30 வயதான வெங்கடேஷ். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளுடன் மனைவியுடன் மதுரையில் வசித்து வருகிறார். அவனியாபுரம் பகுதியில் வசித்து வரும் நண்பர் கார்த்திக் பாபுவின் மனைவி 27 வயதான திவ்யாவுடன்  நெருக்கமாக பழகி வந்துள்ளார். கார்த்திக் பாபுவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் - திவ்யா கள்ள உறவு குறித்து தெரிந்ததும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் தலைமறைவாக கள்ளக்காதல் ஜோடி முடிவு செய்தது.

கடந்த 27ம் தேதி வெங்கடேஷ், திவ்யா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். திண்டுக்கல், சேலம், ஒகேனக்கல் பகுதிக்கு ஜாலியாக சென்று பல்வேறு இடங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் வந்த ஜோடி, தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மீண்டும் வீட்டிற்கு திரும்பினால் பிரச்னை ஏற்படும் என்பதால், இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

பாம்பன் பாலத்திற்கு சென்ற அவர்கள் பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து திட்டமிட்டபடி முதலில் வெங்கடேஷ் கைப்பிடிச்சுவரில் ஏறி நின்று கடலில் குதித்தார். ஆனால், தொடர்ந்து திவ்யா கடலில் குதிக்காமல், கடலில் குதித்த வெங்கடேஷை காப்பாற்றுமாறு அந்த வழியாக சென்றவர்களிடம் கோரினார். பாம்பன் கடற்கரையில் நின்றிருந்த மீனவர்கள் உடனே நாட்டுப்படகில் சென்று கடலில் தத்தளித்த வெங்கடேஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் கிடைத்த பாம்பன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரையும் அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உறவினர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.