கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரண வழக்கில் காயங்களால் ராஜசேகர் உயிரிழக்கவில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை கைதி மரணம்

திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி கைதான திருவள்ளூர் மாவட்டம் அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு போலீசார் ராஜசேகரை அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தவர் மரணடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் தாக்கியதால் தான் ராஜசேகர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி, பிரேத பரிசோதனை முடிந்த நிலையிலும் அவரது உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநில மனித உரிமை ஆணைத்தில் ராஜசேகரின் உறவினர்கள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மேலும் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காமல் காவல்துறையினர் காலம் தாழ்த்துவதாகவும் அந்த மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.

உடலில் 4 காயங்கள்

இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன்,விசாரணை கைதி ராஜசேகர் இறப்பு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ராஜசேகரின் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் தொடையில் ரத்தகட்டு உள்ளது. உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளது. கால் முட்டியில் ரத்தக்கட்டு உள்ளது. முதல் காயம் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவும், 2,3வது காயம் 18மணி நேரத்திற்கு முன்னதாகவும், 4வது காயம் 5நாட்களுக்கு முன்னதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திசுக்கள் தொடர்பான ஆய்வுகள், வேதியியல் தொடர்பான ஆய்வுகள் முடிவுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலின் பின்புறத்தின் சதைபகுதியில் ரத்தக்கட்டு உள்ளது. ராஜசேகரின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களால் உயிரிழக்கவில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.