பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட ஏபிவிபி நிர்வாகி கைது!
பெண்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வலது சாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்
கர்நாடகா மாநிலம் தீர்த்தஹல்லி மாவட்டத்தை சேர்ந்தவர் ப்ரதீக் கவுடா. வலது சாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) நிர்வாகியான இவரை, பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக கூறி கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கல்லூரி மாணவிகள், இளம் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை வீடியோக்களாக ப்ரதீக் கவுடா எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் தனது செல்போன் மூலம் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்கள் ஷிவமோகா மற்றும் அண்டை மாநிலங்களில் வைரலாக பரவியுள்ளது. இதன் பேரில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; மனைவியின் செயலால் அதிர்ந்த காவல்துறை
தீர்த்தஹள்ளி பிரிவைச் சேர்ந்த தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ - NSUI), ப்ரதீக் கவுடா மீது காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த புகாரில், பெண்களுடன் பாலியல் உறவு கொண்டு, அந்த அந்தரங்க வீடியோக்களை வைத்து அப்பெண்களை ப்ரதீக் கவுடா மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் ப்ரதீக் கவுடா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ள போலீசார், இத்தகைய வீடியோக்களை பகிரக் கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற வீடியோக்களை பகிரும் நபர்கள் கண்காணிக்கப்படுவர் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.