ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம் - பகீர் தகவல்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்
சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகமும் உள்ளது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.
இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 1 லட்ச்த்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், அந்த நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு சொந்தமான 61 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.96 கோடி டெபாசிட், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்குத் தெரிந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களிடல் இருந்து சுமார் ரூ.15 கோடி வரை ஆர்.கே.சுரேஷ் வாங்கியதாகவும் தகவலகள் வெளியாகின.
ஆருத்ரா மோசடியில் பாஜக நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகி ஹரீஷ் கைதானது, அதன் தொடர்ச்சியாக, ஆர்.கே.சுரேசுக்கு இதில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஆர்.கே.சுரேஷ் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு டிஜிபி ரேஸில் சஞ்சய் அரோரா? புதிய திருப்பம்!
விசாரணையின் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. அதேசமயம், இந்த சம்மனை ரத்து செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, ஆர்.கே.சுரேஷ் துபாய் சென்று தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும், ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகையில் ஆர்.கே.சுரேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆருத்ரா மோசடி விவகாரகத்தில் ரூ.15 கோடி வரை ஆர்.கே.சுரேஷுக்கு சென்றிருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 500 முகவர்கள் மூலம் ரூ.800 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆருத்ரா மோசடி வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்தவுடன் ஒவ்வொரு கால இடைவெளிகளிலும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 360 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.