தமிழ்நாடு டிஜிபி ரேஸில் சஞ்சய் அரோரா? புதிய திருப்பம்!
தமிழ்நாட்டின் புதிய காவல்துறை தலைவர் ரேஸில் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டின் டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு வருகிர 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். டிஜிபி பதவியை பொறுத்தவரை தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் பட்டியலை ஆய்வு செய்யும் மத்திய பணியாளர் தேர்வாணையமும், உள்துறை அமைச்சகமும், தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி 5 அல்லது மத்திய பணியாளர் தேர்வாணைய விதிகளின்படி 3 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசிடம் கொடுக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும்.
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரையில், இந்த பொறுப்புக்கு தகுதிவாய்ந்த திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். முதல்வராக பொறுப்பேற்றதும் சைலேந்திர பாபுவின் பெயரை அவர் டிக் அடித்தது வரவேற்பை பெற்றுத்தந்தது.
எனவே, எந்த அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவரது நேரடி பார்வையில் டிஜிபிக்கான பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, ஸ்டாலினின் சாய்ஸ் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மாநிலத்தின் சட்ட-ஒழுங்கை பாதுகாக்கும் அதி முக்கிய பதவியான காவல்துறை தலைவர் பதவியை பிடிக்க அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. அடுத்த டிஜிபிக்கான ரேஸில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், ப்ரோமோத் குமார், கந்தசாமி ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இதில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னணியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த வரிசையில், தற்போது டெல்லி காவல் ஆணையராக இருக்கும் 1988 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோராவும் இணைந்துள்ளார். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) இயக்குநர் ஜெனரலாக இருந்த சஞ்சய் அரோரா, கடந்த ஆண்டு டெல்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். டெல்லியில் அவரது தற்போதைய பதவிக்காலம் டெப்யூடேஷன் தன்மையில் இருப்பதாகவும், முதன்மை கேடர் தமிழ்நாடு என்பதால் டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க அவர் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் டிஜிபி பதவிக்கு தரவரிசையின் அடிப்படையில், குறைந்தபட்சம் 11 பேராவது தகுதியுடையவர்களாக இருப்பர். கடந்த முறை கூட 11 பேர் கொண்ட பட்டியலையே தமிழக அரசு அனுப்பியது. அதில், சஞ்சய் அரோராவின் பெயரும் இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தின் டிஜிபி பதவிக்கான காட்சி மிகவும் சிக்கலாக உள்ளது. ஏனெனில் ஒரு சிலரது பெயர்கள் காவல்துறை தலைவர் பதவிக்கான பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. அந்த வகையில், 1988 பேட்சில் சஞ்சய் அரோரா மட்டுமே உள்ளார். 1989 பேட்சில் டிஜிபி அந்தஸ்த்து கொண்ட நான்கு அதிகாரிகள் இன்னும் பணியில் இருந்தாலும், வெவ்வேறு காரணங்களுக்காக அவர்களது பெயர்களை பரிசீலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வு பெறுவதால் டிஜிபி கந்தசாமியை தமிழக காவல்துறை தலைவர் பதவிக்கு பரிசீலிக்க முடியாது. ஆறு மாதங்களுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள எந்த அதிகாரியையும் ஒரு மாநிலத்தின் காவல்துறைத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஷர்மிளாவுக்கு கார்: கோவையில் கமல் அரசியல் கணக்கு - பின்னணி என்ன?
மற்றொரு 1989 பேட்ச் அதிகாரியான பிரமோத் குமாரின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவரது பதவி உயர்வு பல ஆண்டுகளாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேஷ் தாஸ் பெயர் கண்டிப்பாக பரிசீலிக்கப்படாது. எனவே, அவர் ரேஸில் இல்லை. 1989 பேட்சை சேர்ந்த மற்றொரு அதிகாரியான பிரஜ் கிஷோர் ரவி, டிசம்பர் 31, 2023 அன்று ஓய்வு பெறுகிறார், எனவே அவர் டிஜிபிக்கான தகுதியை பெற்றுள்ளார்.
அதேபோல், 1990 பேட்சை பொறுத்தவரை ஆறு டிஜிபி அந்தஸ்த்து அதிகாரிகள் உள்ளனர், அவர்களில் சீனியர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ், சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலின் சேவைக்காலம் ஆகஸ்டு 31, 2025 வரை உள்ளது. அத்துடன், பல்வேறு சோர்ஸுகல் மூலம் டிஜிபி பதவியை பெறுவதற்கான கடுமையான முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். டிஜிபிக்கான ரேஸில் இவர் முன்னணியில் இருந்த நிலையில், சஞ்சய் அரோராவின் வருகை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் அரோராவுக்கு 2004 ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம், 2014 ஆம் ஆண்டு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம், காவல்துறை சிறப்புப் பணிக்கான பதக்கம், அன்ட்ரிக் சுரக்ஷா பதக் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் பணிக்காக பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா என்.ஐ.டி-யில் பட்டம் பெற்ற, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ் தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 2002 முதல் 2004 வரை கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றினார். விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராகவும் (குற்றம் மற்றும் தலைமையகம்) மற்றும் போகுவரத்து கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். பதவி உயர்வு பெற்ற பிறகு தமிழக காவல்துறையில் ஆப்பரேஷன்ஸ் ஏ.டி.ஜி.பி-யாகவும் காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாகவும் நியமிக்கப்பட்டார்.
அவர் பிறகு, எல்லைப் பாதுகாப்பு படையில் சிறப்பு ஆப்பரேஷன்ஸ் ஐ.ஜி-யாகவும் சத்தீஸ்கர் பிரிவு சி.ஆர்.பி. எஃப் ஐ.ஜி-யாகவும் பணியாற்றியுள்ளார். சஞ்சய் அரோரா இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பில் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு சி.ஆர்.பி.எஃப் ஆப்பரேஷன்ஸ் மற்ரும் தலைமை அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராகவும் ஜம்மு காஷ்மீர் மண்டலத்தில் சி.ஆர்.பி.எஃப் சிறப்பு தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, NSG யில் பயிற்சி பெற்ற பிறகு, 1991ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக சிறப்புப் பாதுகாப்புக் குழுவை (SSG) அமைப்பதில் சஞ்சய் அரோரா முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.