ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உசிரிபெண்ட்டாவைச் சேர்ந்த ஹேமாவதி என்பவரும், கேசவலு  என்பவரும்  காதலித்து வந்துள்ளனர்.  இதில் கேசவலு தலித் இனத்தைச் சேர்ந்தவர். இந்தக் காதலை ஹேமாவதியின் பெற்றோர் எதிர்த்துள்ளனர். 

இதையடுத்து, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வந்துள்ளனர். ஹேமாவதி கருவுற்று நிறைமாதமாக இருந்த நிலையில், கடந்த வாரம் கேசவலுவின் பெற்றோர் இருவரையும் ஊருக்கு வரவழைத்துள்ளனர். 7 நாள்களுக்கு முன்பு, பலமனேரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹேமாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து நேற்று மாலை  கேசவலு மருத்துவமனையில் இருந்து தனது மனைவியை டிஸ்சார்ஜ் செய்து குழந்தையுடன் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழி மறித்த ஹேமாவதியின் தந்தையும், உறவினர்களும் கேசவலுவை  தாக்கிவிட்டு  ஹேமாவதியை இழுத்துச் சென்றனர்.

பின்னர் ஹேமாவதியை அடித்துக் கொன்றுவிட்டு, உடலை கால்வாயில் வீசிய அவர்கள், குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர்..

கால்வாய் அருகே குழந்தையைப் பார்த்த சிலர் அளித்த தகவலின்படி, பலமனேர் காவல் துறையினர் குழந்தையை மீட்டனர். ஹேமாவதியின் உடல் கூறாய்விற்காக அனுப்பப்பட்டது. இதையறிந்த கேசவலு தரப்பினர், ஹேமாவதியின் பெற்றோரின் வீட்டை தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.