புதுச்சேரி அருகே பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இதுகுறித்து பாகூர் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இச்சம்பவத்தில் கடலுார் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தனர். இவருக்கு வயது 23. மேலும் சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்றும் கண்டறியப்பட்டது.

சம்பவத்தன்று திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன், கடலுார் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, ஆராய்ச்சிக்குப்பம் அருகே மது குடித்துள்ளான். பின்னர் நடந்து சென்றபோது, வயலில் வேலை பார்த்த மூதாட்டியிடம் மொபைல் போன் பறிக்க முயன்றுள்ளான். அவர் தர மறுக்கவே தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று கடலூர் பகுதியில் சுற்றி திரிந்த சிலம்பரசனை பாகூர் தனிப்படை போலிசார் கைது கைது செய்தனர்.

பிறகு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டியில் பிப்ரவரி மாதம் மூன்று மூதாட்டிகள், மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இச்சம்பவங்களில் சிலம்பரசனுக்கு தொடர்பு உள்ளதா என ஜெயங்கொண்டம் போலீசார் நேற்று பாகூர் காவல் நிலையத்திற்கு வந்து, சிலம்பரசனிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
