தெலுங்கானாவைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர்  கடந்த வாரம் பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலையாளிகள் மீது உட்சபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலையில் பெண் மருத்துவரை கற்பழித்து கொன்ற நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். பெண் மருத்துவரை எவ்வாறு கொலை செய்தனர் என்று காவல்துறைக்கு செய்து காட்டுவதற்காக நான்கு குற்றவாளிகளையும் இன்று காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது திடீரென குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் நான்கு பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கவே வேறு வழியின்றி துப்பாக்கியால் அவர்களை காவலர்கள் சுட்டனர். இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட அதே இடத்தில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.