சேலத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஸ்ரீபாஷ்யம். சேலத்தில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் அருகே நகைக்கடை வைத்து தொழில் பார்த்து வருகின்றனர். இவர்களின் வீடு குரங்குச்சாவடி அருகே இருக்கிறது. நேற்று இரவு கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு ஸ்ரீபாஷ்யம் வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவு உணவு அருந்திய பிறகு குடும்பத்தினர் அனைவரும் தூங்கச் சென்றனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த லாக்கரை திறந்து 300 பவுன் நகைகளை கொள்ளையடித்ததுடன் ரொக்கமாக இருந்த பணத்தையும் திருடியுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. காலையில் தூங்கி எழுந்த ஸ்ரீபாஷ்யம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த சூரமங்கலம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. இரவு தூங்கச் சென்ற ஸ்ரீபாஷ்யம், சாவியை லாக்கரிலேயே வைத்து தூங்கியதாக காவல்துறை அதிகாரியிடம் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.