பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்து விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் வளந்துள்ளார் சிறுமி. போதிய வருமானம் இல்லாததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டார். 

வயிற்று பிழைப்புக்காக அவரது தாயார் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையே அந்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை கல்யாணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் கூறிய சிறுமியின் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள். உடனடியாக அங்கு சென்ற பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி அருள்செல்வி மற்றும் குழுவினர் சிறுமியை மீட்டு அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்கள், உடல் நிலை பாதிப்பு போன்றவற்றை பக்குவமாக எடுத்துசொல்லி கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது.

அப்போது, கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த சிறுமியை பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்து அவரிடம் விசாரித்தபோது நெஞ்சை உறைய வைக்கும் கொடூரங்கள் அரங்கேறியுள்ளது. பாடாலூர் அருகே உள்ள மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், பாபு ஆகிய இருவரும் தாய் வேலைக்கு சென்றதும், தனது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தனது தாயாருக்கும் சிறுமி தெரியப்படுத்தி இருக்கிறார்.

இனிமேலும் தனது மகளை வீட்டில் வைத்து பாதுகாப்பது சிரமம் நினைத்த சிறுமியின் தாய், அவசரம் அவசரமாக கல்யாணம் ஏற்பாடுகளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இது பற்றி சமூக நலத்துறை அதிகாரி செல்வகுமார் பாடாலூர் போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் ரஞ்சித், பாபு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.