TN Corona : எல்லாம் தயாரா இருக்கணும்.. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளுக்கு வந்த அலெர்ட் !!
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இன்றளவும் கூட கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பினால், தற்போது பெருநகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது பதிவாகி வரும் பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் குறைவானதாக இருந்தாலும், 2019 ல் ஏற்பட்ட முதல் வார பாதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. மேலும், ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்றும் இந்தியாவில் பரவி வருவதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாடு முழுதும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில் இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், முகக் கவசம் அணியாத நபர்களிடம் இருந்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘'அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரனோ வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள் , மருத்துவ உபகரணங்கள் , ஆக்சிஜன் வசதிகள் , மருந்துக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.
மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.